×

இந்த வார விசேஷங்கள் :மோகினி ஏகாதசி

8-5-2022 - ஞாயிற்றுக்கிழமை கங்கா சப்தமி

ஏழாவது திதி, சப்தமி என்றும் வழங்கப்படுகிறது. திதிகளில் சப்தமி திதி மிக முக்கியமானது. சப்தமி திதியில் வீடு கட்டுதல், உபநயனம் செய்தல், விவாகம், தேவதா பிரதிஷ்டை, விவசாயம், ஆபரணம் அணிதல், யாத்திரை முதலிய பல சுப காரியங்களைச் செய்யலாம். இந்த திதி ஞாயிற்றுக்கிழமை அமைந்தால் அந்த நாள் பானு சப்தமி என்று வழங்கப்படும். அன்றைய தினம் காலை சூரியனை ஆராதனம் செய்ய வேண்டும். உதய காலத்தில் எழுந்து முற்றத்தில் கோலமிட்டு சர்க்கரைப் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்கும் பொழுது ஆத்ம சக்தி அதிகரிக்கும்.

உடல் நலம் மேம்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் பெரும் வெற்றி கிடைக்கும். நல்ல உத்தியோகம் கிடைக்கும். அரசாங்கத் தொடர்புகள் ஆதாயமாக இருக்கும். கண் நோய்கள் விலகும். தந்தையோடு உள்ள உறவு பலப்படும். இது தவிர இந்த ஞாயிற்றுக்கிழமை கங்கா சப்தமி என்ற விசேஷமும் உண்டு.
இந்த ஆண்டு, கங்கா சப்தமி 2022 மே 8, ஞாயிற்றுக்கிழமை வருவது மிகவும் விசேஷம். அன்றைய தினம் நீராடும்போது கங்கையை நினைத்துக் கொண்டு நீராட வேண்டும். இதனால் செய்த பாவங்கள் தீர்ந்து புண்ணிய பலன் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைகள் விலகி எல்லா காரியங்களும் நினைத்தவாறு வெற்றிகரமாக முடியும். வடநாட்டில் கங்கா சப்தமி பூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று `கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி கங்கை மாதாவை வழிபடலாம். கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

11-5-2022 - புதன்கிழமை  வாசவி ஜெயந்தி

சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக பக்தர்கள், குறிப்பாக வைசிய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். சரி, யார் இந்த வாசவி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயம் ஈசனும் பார்வதியும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார்.
தனக்கு பதிலாக சமதி என்ற மகரிஷியிடம் கயிலாயத்தின் காவல் பொறுப்பை ஒப்படைத்தார். யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார். சமதி முனிவரும் காவல் பணியை மேற்கொண்டிருந்த பொழுது துர்வாச முனிவர் வந்தார்.

அவரை நந்தி பகவான் கொடுத்த உத்தரவின்படி சமதி மகரிஷி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவரை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.இது  இப்படி இருக்க, ஒருநாள் கயிலாயத்தில் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் நடனமாடினர். ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன்னை வணங்காமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி தேவி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார். எல்லாம் ஒரு காரணமாக நடக்கும் ஈஸ்வரன் விளையாட்டுக்கள் தானே.

அவர்கள் இருவரும், பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டி - குசுமாம்பிகை தம்பதிக்குப் பிள்ளைகளாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர். வாசவாம்பா மணப்பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன்
வாசவாம்பாவைக்கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றார். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைசியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு
அதிகரிக்க இரண்டு பிரிவாகப் பிரிந்தனர்.

இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, குடும்பத்தார் சண்டையிட்டு பிரிவதை நினைத்து வருந்தினாள். தன் உயிரைக் கொடுத்தாவது குலப்பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள். அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைத்து அக்னிப் பிரவேசம் செய்தாள் வாசவி,  கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள். அந்த வாசவி அன்னையின் ஜெயந்திதான் இன்று
கொண்டாடப்படுகிறது.

12-5-2022 - வியாழக்கிழமை  மோகினி ஏகாதசி

வசிஷ்டர் ராமருக்கு சொன்ன ஏகாதசி மோகினி ஏகாதசி. சீதையை பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம், (சித்திரை அமாவாசைக்கு மறுநாள் சாந்திரமான முறையில் வைகாசி மாதம் துவங்குகிறது) வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்” என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ராமபிரானே, முறையாக, வைகாசி ஏகாதசி விரதத்தை இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு. செய்த பாவங்களுக்கு வருந்தி இந்த ஏகாதசி விரதம் இருந்தால், பாவம் தீரும் என்பது ஏகாதசியின் தத்துவம்.

இந்த ஏகாதசி விரதத்தை மிக எளிமையாக இருக்கலாம். வழக்கமான ஏகாதசி போல், அன்று, பூரணமாக விரதமிருந்து, திருமாலை வணங்கி, திருமால் கோயிலுக்குச் சென்று, விளக்கு போட்டு, அர்ச்சனை செய்து, இரவு முழுக்க கண் விழித்து, புராண, இதிகாச, ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடி, மறுநாள் காலையில் துவாதசி பாரணை முடிக்க, மோகினி ஏகாதசியின் முழுப்பயனும் கிடைக்கும்.

13-5-2022 - வெள்ளிக்கிழமை  உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை

உமாபதி சிவாச்சாரியார் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். 13ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14ம் நூற்றாண்டின்
முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவருடைய சைவ அறிவையும் சமஸ்கிருத அறிவையும் அறிந்த அரசன் இவருக்கு பல்லக்கு பரிவார மரியாதையை தந்திருந்தான்.
ஒரு முறை இவர் நடராஜரை தரிசித்து விட்டு, பல்லக்கில் விருதுகள் முழங்க முன்னும் பின்னும் விளக்கு தீவட்டிகள் பிடித்தவர்கள் நடக்க, கம்பீரமாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே தன் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த மறை ஞான சம்பந்தர் இவர் செல்வதைப் பார்த்து ‘‘பட்ட கட்டையில் பகல் குருடன் போகிறான் பாருங்கள்” என்று பரிகாசம் செய்தார்.

இதைக்கேட்ட உமாபதி சிவாச்சாரியாருக்கு சுரீர் என்றது. அந்த வார்த்தையின் பொருளை தெரிந்து கொண்ட அவர் அப்போதே மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சைவத்தில் ஆழங்கால் பட்ட இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டதால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தனர்.

கோயிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் கவலைப்படவில்லை. எல்லாம் ஈசன் செயல் என்று நினைத்தார். நடராஜர் கோயிலில் திருவிழா வந்தது. அவ்வருடம் கோயிலில் கொடியேற்றுவதற்கென முறை உமாபதி சிவாச்சாரியார் முறை. ஆனால் உரிமை
இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது.

எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள், உமாபதி சிவத்தை வரவழைத்து, கொடியேற்றும்படி கேட்டுக்கொண்டனர். அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி, கொடியை ஏற்றி வைத்தார். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.

இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத் தொண்டர் புராணசாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. இவர் வட மொழியிலிருந்த பௌஷ்கராகமத்துக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார். சிதம்பரத்துக்கு பக்கத்தே கொற்றவன்குடி என்ற பகுதியில் உமாபதி சிவாச்சாரியார் மடம் இருக்கிறது. அங்கே குருபூஜை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Tags : Mokini Ekadasi ,
× RELATED இந்த வார விசேஷங்கள் :மோகினி ஏகாதசி